“சமுதாயத்துக்கு அர்ப்பணித்தவர்களைப் பாராட்டுவோம்” – பாராட்டு விழாவில் டாக்டர் சுப்ரா

மலேசியாவில் தமது வாழ்நாளில் பெரும் பகுதியைத் தனது சமூகத்துக்காகவும், சமயத்துக்காகவும், மொழிக்காகவும், இலக்கியத்துக்காகவும் அர்ப்பணித்துக் கொண்டவர்களைக் காலமறிந்து, சமூக அமைப்புக்கள் பாராட்டு விழா எடுக்க முன் வர வேண்டும் என ம இ கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டார்.

இன்று, ஞாயிற்றுக்கிழமை (2 ஜூலை 2017) தைப்பிங்கில், தைப்பிங் தமிழர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த “தமிழ்ச்சீலர்” மா.செ.மாயதேவன் அவர்களின் இலக்கியம், சமயம், பொது வாழ்க்கையில் சரித்திர பயணம் எனும் பாராட்டு விழாவில் கலந்து கொண்டபோது டாக்டர் சுப்ரா மேற்கண்டவாறு கூறினார்.

“நான் இப்படித்தான் வாழ்வேன் என வாழ்பவர்கள் ஒரு சிலரே. எனது பார்வையில் இன்று வரை தமது நிலைப் பாட்டிலிருந்து சிறிதும் பிசகாமல் அப்படியே வாழ்ந்து கொண்டிருப்பவர் பெரியவர் “தமிழ்ச்சீலர்” மா.செ.மாயதேவன் அவர்கள்” என டாக்டர் சுப்ரா புகழாரம் சூட்டினார்.

“தமது வாழ்நாளில் பல பதவிகளையும், பொறுப்புகளையும் வகித்தவர் பெரியவர் “தமிழ்ச்சீலர்” மா.செ.மாயதேவன் அவர்கள். குறிப்பிட்டக் காலத்திற்குப் பின்னர் காலமறிந்து அந்தப் பதவிகளை மற்றவர்களிடம் ஒப்படைத்திருக்கிறார். அவரது இந்நடவடிக்கையானது அவரது உயர்ந்த பண்பைக் காட்டுகிறது” என டாக்டர் சுப்ரா மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் ம இ கா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ். கே. தேவமணி, பேராக் மாநில ம இ கா தொடர்புக் குழுத் தலைவர் டத்தோ வ. இளங்கோ, தைப்பிங் தமிழர் சங்கத் தலைவர் திரு. க. தேவராஜூ, மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவர் திரு. பெ. இராஜேந்திரன், நூலாசியர் மகேந்திரன் நவமணி உட்பட தைப்பிங் வாழ் பொதுமக்கள் திரளாகக் கலந்து சிறப்பித்தனர்.

 

‘தமிழ் சீலர்’ மாயத்தேவனை கௌரவிக்கின்றார் டாக்டர் சுப்ரா….

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *