டாக்டர் சுப்ரா முயற்சியால் சிகாமாட் சுங்கை மூவார் குழுவகத் தமிழ்ப்பள்ளிககு 4 ஏக்கர் நிலம் – நினைவுகூரும் தலைமையாசிரியர்

1926ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட சிகாமாட் தேசிய வகை சுங்கை மூவார் குழுவகத் தோட்டத் தமிழ்ப்பள்ளியானது 18 மாணவர்களை மட்டும் கொண்டு தொடங்கப்பட்டது. தற்பொழுது சிகாமாட் நாடாளுமன்றத்தில் முதல் குழுவகத் தமிழ்ப்பள்ளியாக உருமாற்றம் கண்டு சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் சிறந்த தமிழ்ப்பள்ளியாகவும் திகழ்கின்றது.

தோட்டப்புறத்தில் சிறிய அளவில் இருந்தாலும் அனைத்து வசதிகளையும் கொண்ட தமிழ்ப்பள்ளியாகவும் மாணவர்களின் கல்வி அடைவுநிலை, புறப்பாட நடவடிக்கை என அனைத்திலும் தொடர் வளர்ச்சியையும் இப்பள்ளிக்கூடம் பதிவு செய்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி பிரேமா இராமகிருஷ்ணன் கருத்துரைக்கையில், “2014-ஆம் ஆண்டில் இப்பள்ளிக்குக் குழுவகத் தமிழ்ப்பள்ளி எனும் அங்கீகாரம் கிடைத்தது. அக்காலக்கட்டத்தில் பள்ளிக்கூடத்தின் துரித வளர்ச்சிக்குப் பக்கபலமாக இருந்தது டாக்டர் சுப்பிரமணியம் அவர்கள்தான். கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கி இதுவரையில் ஏறக்குறைய RM216,000.00 மேல் இப்பள்ளிக்கு நிதியுதவியாக அவர் வழங்கியுள்ளார். மேலும், ஒவ்வோர் ஆண்டும் யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்பு நடத்துதற்கான செலவுத் தொகை முழுவதும் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சுப்பிரமணியம் அவர்களே ஏற்றுக் கொண்டார். சிறிய பள்ளியாக இருந்த போதிலும் இப்பள்ளியில் மற்ற குழுவகப் பள்ளிகளுக்கு நிகரானதாகவும் தரமானதாகவும் இருக்க வேண்டுமென்பதில் டாக்டர் சுப்பிரமணியம் அவர்கள் மிகவும் உறுதியாகவே செயல்பட்டார்” என்றும் தெரிவித்தார்.

“அதன் அடிப்படையில், இப்பள்ளிக்குத் தேவையான தளவாட வசதிகள், ஒவ்வொரு வகுப்பறையிலும் “ஸ்மார்ட் தொலைகாட்சி வசதி”, குளிர்சாதன அறை வசதி, நூலக வசதி, கணினி அறை என சகல வசதிகளையும் இப்பள்ளிக்காக ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் இப்பள்ளிக்குத் தேவையான நிதிகளை நாங்கள் கேட்பதற்கு முன்னதாகவே அறிந்து தேவைக்கு அதிகமாகவே இதுநாள் வரையில் டாக்டர் சுப்பிரமணியம் அவர்கள் வழங்கியுள்ளார்” என்றும் பிரேமா மேலும் தெரிவித்தார்.

இப்பள்ளியின் வளர்ச்சியின் ஒவ்வொரு முயற்சியில் மட்டுமின்றி இப்பள்ளியின் ஒவ்வொரு தூண்களிலும் டாக்டர் சுப்ரா அவர்களின் பங்களிப்பு நிறைந்து இருப்பதாக இப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி பிரேமா இராமகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *