“மக்களுக்கு வழங்கிய சேவைகளின் அடிப்படையில் மீண்டும் வெற்றி பெறுவேன்” – டாக்டர் சுப்ரா

நேற்று சனிக்கிழமை (28 ஏப்ரல் 2018) சிகாமட்டில் நடைபெற்ற 14-வது பொதுத் தேர்தலுக்கான சிகாமட் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கலுக்குப் பின்னர் தேசிய முன்னணி வேட்பாளராக டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அறிவிக்கப்பட்டார்.

அந்த அறிவிப்புக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய டாக்டர் சுப்ரா, தாம் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை சிகாமாட் தொகுதிக்குட்பட்ட ஜெமந்தா மற்றும் பூலோ காசாப் ஆகிய பகுதிகளில் நிறைவேற்றியிருப்பதால் மக்கள் சேவையின் அடிப்படையில் தம்மை இத்தொகுதியில் மீண்டும் தேர்வுச் செய்வர் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறினார்.

சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் இம்முறை மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

இத்தொகுதியில் தேசிய முன்னணியின் சார்பில் கடந்த 3 பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற ம இ கா தேசியத் தலைவருமான டாக்டர் சுப்ரா இம்முறையும் இத்தொகுதியில் களம் இறங்கியுள்ளார். இவரை எதிர்த்து பிகேஆர் கட்சியின் சார்பில் சந்தாரா குமார் ராமநாயுடுவும், பாஸ் கட்சியின் சார்பில் கைருல் பவுசு அஹ்மாட்டும் போட்டியிட விருக்கின்றனர்.

இத்தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் ஜோகூர், சிகாமாட் ஜுப்லி இந்தான் சுல்தான் இப்ராஹிம் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற போது, நூற்றுக்கணக்கான தேசிய முன்னணி ஆதரவாளர்களும், மஇகா தலைவர்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

இத்தொகுதியில் 55,350 பதிவுப் பெற்ற வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 47 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள், 43 விழுக்காட்டினர் சீனர்கள், 10 விழுக்காட்டிடனர் இந்தியர்கள், எஞ்சிய 1 விழுக்காட்டினர் இதர இனத்தவர்களாவர்.

நாட்டின் 14 வது பொதுத் தேர்தல் அடுத்த மாதம் 9 ஆம் தேதி புதன்கிழமை நடைபெறவிருக்கிறது.

 

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *