சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதிக்கு நான்காவது தவணையாகப் போட்டியிட இன்று சனிக்கிழமை (28 ஏப்ரல்2018) வேட்புமனுத் தாக்கல் செய்த டாக்டர் சுப்ரா கடந்த 14 வருடங்களாக சிகாமாட்டில் வழங்கி வந்திருக்கும் சேவைகள், உழைப்பு, நற்பணிகள் ஆகியவற்றின் அடிப்படையில் மீண்டும் எளிதாக வெற்றி பெறுவார் என அவருடைய சிகாமாட் தொகுதி ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதற்கேற்ப, இன்று டாக்டர் சுப்ரா வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்தபோது, அவருக்கு ஆதரவாக நூற்றுக் கணக்கான ஆதரவாளர்கள் அவருடன் ஊர்வலமாக வந்தனர்.
நாடு முழுமையிலுமிருந்து ஏராளமான மஇகா தலைவர்களும் டாக்டர் சுப்ராவுக்கு ஆதரவாக இன்று சிகாமாட்டில் திரண்டனர்.
சிகாமாட்டில் டாக்டர் சுப்ரா மும்முனைப் போட்டியை எதிர்நோக்குகிறார்.
அவரை எதிர்த்து பக்காத்தான் கூட்டணி வேட்பாளராக பிகேஆர் கட்சியின் சார்பில் சந்தாரா குமார் ராமாநாயுடு போட்டியிடுகிறார். பாஸ் கட்சியின் சார்பில் கைருல் பயிசி பின் அகமட் காமில் போட்டியிடுகிறார்.
சிகாமாட்டில் அவர் கடந்த காலங்களில் மேற்கொண்டு வந்திருக்கும் மேம்பாட்டுத் திட்டங்கள் காரணமாகவும், சிகாமாட்டை நவீன, பொருளாதார மையமாக உருவாக்கிக் காட்டியிருப்பதற்காகவும் சிகாமாட் தொகுதியின் வாக்காளர்கள் அவருக்கு மீண்டும் அமோக ஆதரவளித்து வெற்றி பெறச் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த கால சேவைகள் மட்டுமின்றி, சிகாமாட்டை எதிர்காலத்தில் சிறப்பான, வளமையான பிரதேசமாக உருமாற்றும் விதமாகவும் சிகாமாட் மேம்பாட்டுத் திட்டம் ஒன்றை டாக்டர் சுப்ரா அறிமுகப்படுத்தியுள்ளார்.
இவை தவிர, கிழக்குக் கரை பொருளாதார மண்டலத்தின் ஒரு பகுதியாக சிகாமாட் கொண்டுவரப்படும் என்றும் பிரதமர் நஜிப் துன் ரசாக் அறிவித்திருக்கிறார்.
கிம்மாஸ் முதல் ஜோகூர் பாரு வரையிலான இரட்டைத் தண்டவாளப் பணிகளையும் பிரதமர் நஜிப் அண்மையில் சிகாமாட்டில் தொடக்கி வைத்தார்.
இத்தகைய மேம்பாட்டுத் திட்டங்கள் காரணமாக, டாக்டர் சுப்ராவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிகாமாட் வாக்காளர்கள் பரவலான ஆதரவுடன், அமோகமான வெற்றியைப் பெற்றுத் தருவார்கள் என சிகாமாட் தொகுதியில் எதிர்பார்ப்பு நிலவுகின்றது.