டாக்டர் சுப்ராவின் ‘ஆசிரியர் தின’ செய்தி

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு,

மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம்

வழங்கிய வாழ்த்துச் செய்தி

“ஆசிரியர் நாட்டையும் நல்லினத்தையும் உருவாக்குபவர்”

ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பது தான் ஆசிரியரின் சிறப்புகளில் மிகவும் பிரதானமானது. அது மட்டுமின்றி, அவர்களின் உதவியும் வழிகாட்டலும் ஒரு மாணவனுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்குகின்றது. “ஆசிரியர் பணி அறப்பணி; அதற்கே உன்னை அர்ப்பணி” என்பதற்கொப்ப தியாக உணர்வோடு தங்கள் கடமைகளை இன்றைய ஆசிரியர்கள் ஆற்றுகின்றனர் என்றால் அது மிகையாகாது.

அவ்வகையில் இவ்வாண்டு “ஆசிரியர் நாட்டையும் நல்லினத்தையும் உருவாக்குபவர்” எனும் கருப்பொருளோடு மலேசிய நாட்டில் 46ஆம் ஆண்டு ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் வேளையில், எதிர்காலச் சமூகத்தை இனபேதமின்றி நாட்டின் சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கும் பெரிய பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ள ஆசிரியர் சமூகம், கற்றல் கற்பித்தலிலும் தங்கள் பணியைத் திறம்பட செய்து, மாணவர்கள் உலகில் அவர்களின் உள்மனத்திற்கு ஏற்ப உருமாற்றத்தைக் கொண்டு வந்து, முற்போக்குச் சிந்தனைத்திறன் கொண்ட நாளைய தலைவர்களை உருவாக்க வேண்டும்.

உலகம் இன்று பலதுறைகளில் வல்லமைப் பெற்ற அறிஞர்களைப் பெற்றுக் கொண்டிருப்பதற்கு ஆசிரியர்களே முக்கியக் காரணம். எல்லாத் துறையைச் சார்ந்த வல்லுனர்களை உருவாக்குவதே புனிதமான இந்த ஆசிரியர் துறைதான். மேலும் மாணவ சமூகத்துக்குத் தேவையான கல்வி, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என்று அனைத்தையும் ஒரு சேர கற்றுக்கொடுத்து மாணவர்களைக் கற்றல் திறன் உடையவராக, நல்லவராக, பண்புள்ளவராக, சிறந்தவராக, நாணயமானவராக, அறிஞராக, மேதையாக சமூகத்தின் உயர்ந்த நிலைக்கு எடுத்து செல்லும் உயரிய பொறுப்பே ஆசிரியரின் சிறப்பு ஆகும்.

மேலும், ஒரு மாணவரைத் தலைசிறந்த மாணவராக உருவாக்க ஆசிரியரின் பங்கு மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு மாணவர்களிடையே தனிப்பட்ட திறன், ஆர்வம், ஈடுபாடு, ஆசை இருக்கும் பட்சத்தில், அதை அந்த மாணவர்கள் புரிந்துகொள்ளும்படி செய்வது மட்டுமின்றி அவர்களுடைய திறனுக்கு ஏற்றப்படி அவர்களை வடிவமைப்பது ஆசிரியர்களின் சவாலாக அமைகிறது. இதற்காகத் தங்களுடைய அறிவையும், பொன்னான நேரத்தையும், மேலான உழைப்பையும் முதலீடு செய்பவர்களாக ஆசிரியர்கள் தங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். ஆசிரியப் பெருமக்களுக்கு இவ்வேளையில் எனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

One Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *