டாக்டர் சுப்ராவின் அன்னையர் தின வாழ்த்துச் செய்தி

மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான

டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அவர்களின்

அன்னையர் தின வாழ்த்துச் செய்தி

“மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது முன்னோர்கள் வாக்கு. உலகில் அனைவருக்கும் முதன்மையாகவும் வரமாகவும் இருப்பவர்தான் அம்மா. அம்மா என்ற வார்த்தை உணர்வு சார்ந்தது. ஒரு சகோதரியாக, தாயாக, தாரமாக, தோழியாக, மகளாக, இல்லத்தில் உள்ளவர்களைப் பக்குவப்படுத்துபவராக, அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச் செல்லும் ஆசானாக என இப்படி அனைத்துமாய் இருப்பவர்தான் அம்மா.

பெண்கள் தங்கள் வாழ்நாளில் எத்தனையோ பொறுப்புகளை வகித்து வந்தாலும் அன்னை என்கிற பொறுப்பு மிகவும் உன்னதமான இடத்தை வகிக்கின்றது. ஒவ்வொரு குடும்பத்தின் எதிர்காலமும் வளர்ச்சியும் அவ்வீட்டின் குடும்பத் தலைவி பொறுப்பை வீற்றிருக்கும் தாய்மார்களின் அன்பிலும் அரவணைப்பிலும்தான் உள்ளது. அன்னையர்களின் தியாக உணர்வையும் அர்ப்பணிப்பையும் கெளரவிக்கும் விதத்தில்தான் ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைகளில் கிழக்கத்திய பண்பின் அடிப்படையில் உலகளாவிய நிலையில் அன்னையர் தினம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

ஆனால், பத்து திங்கள் சுமந்து, பகல் இரவு பாராமல் காத்து, நாளெல்லாம் தான் பட்டினியாய் இருந்தாலும், ஒரு கணமேனும் பிள்ளைகளின் பசியைப் பொறுக்காது உணவூட்டி, வித்தகனாய் கல்வி பெற வைத்து, மேதினியில் மேன்மையாய் நாம் வாழச் செய்த அந்த கண்கண்ட தெய்வத்தை வாழ்த்தி வணங்கி பணிவிடைகள் செய்து மகிழ்ச்சியளிக்க இந்த ஒரு நாள் நிச்சயம் போதாது. அவ்வகையில், அன்னையர்களின் தியாக அடிப்படையில் ஒவ்வொரு நாளும் அன்னையர் தினம்தான்.

எனவே, அன்னையர் தினத்தன்று மட்டும் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கும் நோக்கத்தோடு இல்லாமல் ஈன்றெடுத்த தாய்மார்களின் தியாக உணர்வைப் போற்றிப் பிள்ளைகள் அவர்களைப் பேணிக் காக்க வேண்டும். மேலும் தங்களது தாய்மார்களின் உடல் நலனில் அக்கறை செலுத்தி அவர்கள் நோய் நொடியின்றி சுகாதாரத்துடன் வாழ வகை செய்ய வேண்டும்.

அவ்வகையில், ஒவ்வொருவரின் வீட்டிலும் அன்னையைப் போற்றி, வாழ்த்தி, மகிழ்விக்கின்ற தினமாக இன்றைய தினம் மலர்ந்து மணம் பரப்ப வேண்டும் என வாழ்த்துவது மட்டுமின்றி, உலகில் வாழும் அனைத்துத் தாய்மார்களுக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துகளைச் சமர்ப்பித்து, சுகாதாரத்துடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.”

One Comment

  1. Rukumanee Chinnaya

    Thank you so much Datuk Seri Dr.S.Subramaniam for giving us MOTHERS a very nice message….as a LEADER,..FATHER ,BROTHER,and a SON Again we really thank you again Datuk Seri.

    Reply

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *